public exam rules in tamilnadu 2023
public exam rules in tamilnadu 2023 பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கும் நிலையில், விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மூன்றாயிரத்து 185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் மாணவ மாணவிகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுத்தேர்வில் மாணவ மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு அறையில் மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றி எழுதுததல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவி ஓராண்டு தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை தொடர்புக் கொள்ளலாம். மாணவர்கள், 9498383081, 9498383075 எண்ணில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மூன்றாயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
நாளை 12ஆம் வகுப்பு தேர்வு தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் படிக்கும் புத்தகத்திலிருந்து தான் கேள்வி வரப்போகிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும் மனவுறுதியும் தான் தேவை. அது இருந்தாலே நீங்கள் பாதி வெற்றி பெற்றதாகும்.
தேர்வு என்பது உங்களை பரிசோதிக்க அல்ல. உங்களை உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தான். அதனால் எந்த தயக்கமும் இல்லாமல் தேர்வை எதிர்கொள்ளுங்கள். தேர்வை கண்டு பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக முழுமையாக எழுதுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். முதல்வராக இல்லாமல் உங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்த்தி உங்கள் வெற்றிக்காக் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.