TNPSC Group 4 Vacancies Details 2023
நீண்ட இடைவெளிக்கு பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலேயே அதிகம் பேர் எழுதுவது குரூப் 4 தேர்வுதான். அதனாலேயே, பல சர்ச்சைகளும், கோரிக்கைகளும் இத்தேர்வைச் சுற்றி வருகின்றன. தமிழக அரசுத் துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 9,870 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவுகள் வெளியாவது, அடுத்தடுத்து தள்ளிபோன நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின.
அறிவிப்பு வெளியானபோது, 7 ஆயிரத்து 381 ஆக இருந்த பணியிடங்கள், 10 ஆயிரத்து 117 ஆக அதிகரிக்கப்பட்டது. 7 மாதங்களுக்கு பிறகு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த பணியிடங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

30,000 பணியிடங்கள்
கொரோனா காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தேர்வு நடைபெறாததுதான், அதிக பணியிடங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்கான முக்கிய காரணம். பிற துறைகளின் பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என அரசாணை வெளியானது மற்றொரு காரணம். ஒரு ஆண்டுக்கு 10,000 பணியிடங்கள் என்றால், 3 ஆண்டுகளுக்கு 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது தேர்வர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனால், 2017ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி, 2015 முதல் 2018 வரை 3 ஆண்டுகளுக்கு சேர்த்து 11,994 பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்றும் 2019 ஆம் ஆண்டு வெளியான அறிவிப்பின்படி, 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சேர்த்துதான் 9 ஆயிரத்து 882 பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 60 ஆக அதிகரிக்கப்பட்டதால், காலியிடங்கள் உருவாவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி-யிடம் விளக்கம் கேட்டபோது, பணியாளர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்கள் அனைத்தும் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும், இனிமேல், அடுத்த தேர்வில்தான் பணியிடங்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது
18 லட்சம் தேர்வர்களுக்கு, 10 ஆயிரம் பணியிடங்கள் என்பது 1 சதவிகிதத்திற்கும் குறைவானது என்ற நிலையில், பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்பது வலுவான கோரிக்கையாக மாறி உள்ளது.