Trb Arts and Science Asst Professor Recruitment 2023 Fake News
Trb Arts and Science Asst Professor Recruitment 2023 Fake News தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள 4136 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து வெளியான தகவல் தவறானது என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.
இந்த நிலையில், 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் சேவையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என 48 பக்க அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,136 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் மே 15-ம் தேதி மாலை 05.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதை போலவே பொய்யான அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பு தவறான தகவல் எனவும், இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.