Watermelon health benefits in tamil
கோடைகாலம் வந்துவிட்டால் தெருவுக்கொரு தர்பூசணிக்கடை முளைத்துவிடும். ஒரு கண்ணாடிப் பாத்திரத்துக்குள் தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருப்பார்கள். கண்ணைக் கவரும் இதன் ரத்தச் சிவப்பு நிறம், நம்மையறியாமலேயே நம்மைக் கடையை நோக்கி இழுத்துவிடும். கொஞ்சம் மிளகாய்த்தூளை லேசாக மேலே தூவித் தருவார் கடைக்காரர். மிளகாய்த்தூள் தூவினால் ஒரு சுவை; அப்படியே சாப்பிட்டால் இன்னொரு சுவை. இரண்டுமே அலாதியானவை. தர்பூசணி சாப்பிடுவதற்காகவே கோடைகாலம் வராதா என ஏங்குபவர்களும் உண்டு. குறைவான விலையில் நிறைவான பலன் தருவது தர்பூசணி.
கோடைகாலத்தில் உடலுக்குத் தேவையான தண்ணீர் சத்தினையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கக்கூடிய பழங்களில் ஒன்று தர்பூசணி ஆகும். இப்பழம் உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதோடு வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்துகிறது. தர்பூசணி 92 விழுக்காடு தண்ணீர் சத்தினைக் கொண்டுள்ளது. இப்பழத்தினை உண்ணும்போது இனிப்பு கலந்த சாறு நிறைந்த சதைப்பகுதியையும் குளிர்ச்சியையும் நாம் உணரலாம்.
இது, வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் சீனாதான் இப்பழ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. உலகின் தர்ப்பூசணி உற்பத்தியில் ஐம்பது விழுக்காட்டிற்கும் அதிகமாக சீனா செய்கிறது. இப்பழத்தின் வெளிப்புறம் மஞ்சள் கலந்த பச்சைநிறத்தில் வெள்ளை நிறக்கோடுகளுடன் காணப்படுகிறது. இப்பழத்தின் உட்புறம் வெளிர் சிவப்பு, சிவப்பு, மஞ்சள் நிறத்தில் சாறு நிறைந்த சதைப்பகுதியினைக் கொண்டுள்ளது. இப்பழம் கறுப்புநிறக் கொட்டைகளை சதைப்பகுதியில் கொண்டுள்ளது. இப்பழம் உருண்டை, நீள்வட்டம், வட்ட வடிவங்களில் காணப்படும்.
இது தரும் எண்ணற்ற பலன்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
இதய நலனைக் காக்கும்
இதயத்தை இளமையாக வைத்துக்கொள்ள உதவும். தர்பூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளது. இது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும்.
நீர் இழப்பை கட்டுப்படுத்தும்!
தர்பூசணியில் 90 % அளவுக்கு நீர் உள்ளது. கோடை காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு (Dehydration) பிரச்னைகள் ஏற்படாது.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்!
நடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணி குறைக்கும். தமனிகள் சிறப்பாகச் செயல்படவும் உதவும்.
எலும்பைப் பாதுகாக்கும்!
தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பைப் பாதுகாக்கும். எலும்பு நோயான ஆஸ்டியோபோரோசிஸைத் (Osteoporosis) தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.
எடையைக் குறைக்கும்!
இதில் பெருமளவுக்கு நீர்தான் இருக்கிறது. கலோரியும் குறைவு. இதனால் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர எடை குறையும்.
முடி மற்றும் சருமத்துக்கு நல்லது!
இதிலுள்ள பீட்டா கரோட்டின் , உடலால் வைட்டமின் ஏ வாக மாற்றப்படும். இது முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. இதன் பட்டையைச் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியாமல், தோலில் தடவலாம். இதில் பாக்டீரியாத் தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்னைக்கும் இது நல்ல தீர்வு தரும்.
மனநிலையைச் சிறப்பாக வைத்திருக்க உதவும்!
இதில் வைட்டமின் பி 6 உள்ளது. இது, நமது மூளையில் பல வேதிப்பொருட்களை உற்பத்தி செய்ய உதவக்கூடியது. இந்த வேதிப்பொருட்கள்தான் நமது நடவடிக்கை மற்றும் மனநிலைக்குக் காரணமாக அமைகின்றன. வைட்டமின் பி 6-ல் ஏற்படும் குறைபாடு மனஅழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். தர்பூசணியை தொடர்ந்துச் சாப்பிட்டுவந்தால், மனநிலை அமைதியாக, நன்றாக இருக்கும்.
ஆஸ்துமாவைத் தடுக்கும்!
வைட்டமின் சி குறைபாட்டால் ஆஸ்துமா ஏற்படுகிறது. தர்பூசணியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, ஆஸ்துமா பிரச்னை நெருங்காது.
சிறுநீரகத்தைப் பாதுகாக்கும்!
சிறுநீரகத்துக்குச் சிரமம் கொடுக்காமல் திரவக் கழிவுகளை வெளியேற்ற இது உதவும். சிறுநீர் வெளியேறும்போது சிரமம் கொடுக்கும் அமோனியாவை , கல்லீரலில் இருந்து வெளியேற்ற இது உதவும்.
சிறுநீர்க் கற்களிலிருந்து இதன் விதைகள் நம்மைக் காக்கும். ஒரு டேபிள்ஸ்பூன் விதைகளை அரைத்து அதில் கொஞ்சம் வெந்நீரை ஊற்ற வேண்டும். சூடு ஆறியதும் இதைக் குடிக்கலாம்.
மலச்சிக்கலுக்கு மருந்து!
இதில் நார்ச்சத்து மற்றும் நீர் அதிக அளவில் இருக்கிறது. அதனால் இது மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து. ஆனால், அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு ஏற்படும்.
நெஞ்செரிச்சலுக்கு மருந்து!
நெஞ்செரிச்சலாக இருந்தால் ஒரு தர்பூசணியை நறுக்கி, அதில் நான்கு அல்லது ஐந்து சிறு துண்டுகளைச் சாப்பிடலாம். நல்ல பலன் கிடைக்கும்.
கோடையில் ஏற்படும் எல்லா பிரச்னைகளிலிருந்தும் நம்மைக் காக்கிறது தர்பூசணி. உடல் சூட்டைத் தணிக்கும்; வெப்பம் மிகுந்த நம் தடபவெட்ப நிலைக்கு இது நமக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.